

சென்னை,
'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து 'குட் பேட் அக்லி' வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார்.இவர் நடிகர் மட்டுமல்லாமல் கார் பந்தயவீரரும் கூட. 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கி பல்வேறு தொடர்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பிறந்தநாள் நல்வாழ்த்துகள், என் அன்பிற்குரிய அஜித் சார்.. என்னையும், எங்களை அனைவரையும் ஊக்கப்படுத்தியதற்கும்; இந்தியாவை பெருமை கொள்ளும் வகையில் திகழ்வதற்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்களே நம் தேசத்தின் ஆகச்சிறந்த பெருமை ..நம் 'பத்ம பூஷன்'.. உங்கள் அன்பு மற்றும் கருணையைப் பெறும் பாக்கியம் எனக்கு எப்போதும் வாய்க்கிறது. உங்களைச் சந்தித்த அந்த நாளுக்காகவும், உங்களுடன் இணைந்து பணியாற்றியதற்காகவும், 'குட் பேட் அக்லி' மூலம் மறக்க முடியாத நினைவுகளைப் படைத்ததற்காகவும் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்; இவை அனைத்தும் ஏதோ ஒரு கனவு போலத் தோன்றுகின்றன. இன்னும் பல சிறப்பான நினைவுகளைப் படைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் — மிக விரைவில்! என்று தெரிவித்துள்ளார்.