சாத்தான்குளம் சம்பவம்: காவல் துறையின் மாண்பை குறைப்பதா? - நடிகர் சூர்யா கண்டனம்

சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம்: காவல் துறையின் மாண்பை குறைப்பதா? - நடிகர் சூர்யா கண்டனம்
Published on

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் லாக்கப் அத்துமீறல் காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். போலீசாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, நலமாக இருப்பதாக சான்று அளித்திருக்கிறார்.

நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்திரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல், இயந்திர கதியில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய கடமை மீறல் செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம் அதிகார அமைப்புகள் காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இந்த கொடூர மரணத்தில், தங்களுடைய கடமையை செய்ய தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. காவல்துறையில் அர்ப்பணிப்புடன் தன் கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். அதேநேரம், அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்படும் என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

டைரக்டர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்து விடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல் துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com