ராக்கி பாயால் ஈர்க்கப்பட்டு முழு சிகரெட் பேக்கையும் புகைத்த 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி...

கே.ஜி.எப். சேப்டர் 2 படத்தில் வரும் ராக்கி பாய் வேடத்தில் ஈர்க்கப்பட்டு முழு சிகரெட் பேக்கையும் புகைத்த 15 வயது சிறுவனின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ராக்கி பாயால் ஈர்க்கப்பட்டு முழு சிகரெட் பேக்கையும் புகைத்த 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி...
Published on

ஐதராபாத்,

கே.ஜி.எப். என்ற தங்க வயல் கோட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் கே.ஜி.எப். இதன் 2ம் பாகம் கே.ஜி.எப். சேப்டர் 2 என்ற பெயரில் புது வருட தினத்தில் வெளியானது.

அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த, நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூலில் பல நூறு கோடிகளை கடந்து சாதனை படைத்தது. வேகமும், விறுவிறுப்பும் கலந்து சண்டை பிரியர்களுக்கு தீனி போட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், அதில் வரும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. அவர்களது மனதில் இருந்து நீங்காத இடம் பெற்றுள்ளது.

இந்த படத்தினை தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள 15 வயது சிறுவன் 2 நாட்களில் 3 முறை பார்த்திருக்கிறான். அதில் ராக்கி பாய் வேடத்தில் வரும் நடிகர் யாஷின் நடிப்பில் ஈர்க்கப்பட்டு உள்ளான்.

இதனால், ஒரு முழு சிகரெட் பேக்கையும் ஒரே மூச்சில் புகைத்துள்ளான்.

இதன் விளைவாக, அந்த சிறுவனுக்கு கடுமையான தொண்டை வலி மற்றும் இருமலும் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை ஐதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்பின்பு மருத்துவர்கள் போராடி சிகிச்சை அளித்து சிறுவனை மீட்டுள்ளனர். அவனுக்கு கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி நுரையீரல் துறை மருத்துவர் ரோகித் ரெட்டி பாதுரி கூறுபோது, ராக்கி பாய் போன்ற வேடங்களை பார்த்து டீன்-ஏஜ் சிறுவர்கள் எளிதில் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். இந்த இளஞ்சிறுவன், ஒரு முழு சிகரெட் பேக்கையும் புகைத்ததில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளான்.

நமது சமூகத்தில் திரைப்படங்கள் அதிக தாக்கம் ஏற்படுத்த கூடிய ஒன்றாக உள்ளது. சிகரெட் புகைத்தல், புகையிலை போடுதல் அல்லது மதுபானம் குடித்தல் போன்ற செயல்களை, கவர்ந்திழுக்கும் விசயம் ஆக்காமல் பார்த்து கொள்ளும் அறநெறி பொறுப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு உள்ளது.

பெற்றோர்களும், தங்களுடைய குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது குழந்தைகளின் செயல்களில் எந்த காரணிகளெல்லாம் தாக்கம் ஏற்படுத்துகிறது என கண்காணிக்க வேண்டும். பின்னர் வருந்துவதற்கு பதில், முன்பே அவர்களுக்கு புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் போன்றவற்றின் தீய விளைவுகளை பற்றி எடுத்து கூறி, அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெற்றோர்கள் முக்கிய பங்காற்றுவது மிக அவசியம் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com