ஸ்டிரைக் முடிந்தது திரைக்கு வர தயாராகும் காலா, விஸ்வரூபம்-2 படங்கள்

ஸ்டிரைக் முடிந்ததால் காலா, விஸ்வரூபம்-2 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது.
ஸ்டிரைக் முடிந்தது திரைக்கு வர தயாராகும் காலா, விஸ்வரூபம்-2 படங்கள்
Published on


பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தினால் 48 நாட்களுக்கு மேல் புதிய படங்கள் திரைக்கு வராமல் இருந்தன. கடந்த மாதம் 30 படங்கள் தணிக்கை முடிந்து ரிலீசுக்கு காத்து இருந்தன. இந்த மாத வெளியீட்டுக்கும் 10 படங்களுக்கு மேல் தயாராக இருந்தன. வழக்கமாக தமிழ் புத்தாண்டில் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகமாக திரைக்கு வரும். ஆனால் எந்த ஒரு படமும் இல்லாமலேயே புத்தாண்டு கழிந்தது.

தற்போது வேலை நிறுத்தம் முடிந்துள்ளதால் வாரத்துக்கு சுமார் 3 அல்லது 4 படங்களை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. படங்கள் வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தணிக்கை முடிந்த படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படங்களும் திரைக்கு வர தயாராக இருக்கின்றன. இந்த படங்கள் தணிக்கை முடிந்து யுஏ சான்றிதழ் பெற்றுள்ளன. காலா படத்துக்கு முன்பே விஸ்வரூபம்-2 தணிக்கை முடிந்துவிட்டது. காலா படத்தை இந்த மாதம் இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்துக்கு முன்பாக தணிக்கை முடிந்த 40-க்கும் மேற்பட்ட படங்கள் காத்திருக்கும் நிலையில் காலா படத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தியேட்டர்கள் கிடைக்காவிட்டால் காலா, விஸ்வரூபம்-2 ஆகிய 2 படங்களுமே அடுத்த மாதம் திரைக்கு வரும் என்றும், ரிலீஸ் தேதி அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காலா படத்தில் ரஜினிகாந்த் மும்பை தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்வரூபம்-2 படத்தில் கமல்ஹாசன் உளவுத்துறை அதிகாரியாக வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com