

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். ரசிகர்களின் ரசிப்புத்தன்மை இப்போது மாறிவிட்டது. கதாநாயகனை நேசிப்பது போல் அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிக்க தொடங்கி விட்டார்கள். பரம்பரா வெப் தொடரில் என் கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பே இதற்கு உதாரணம்.
ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிப்பதன் அவசியம், புதிய பரிமாணத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஓ.டி.டி தளங்கள் மூலம் இப்போது படவாய்ப்புகள் அதிகமாகி விட்டன. நாம் வெளிநாட்டு படங்களை பார்ப்பது போலவே நமது இந்திய மொழி படங்களை வெளிநாட்டினர் பார்க்க வாய்ப்புள்ளது.
இதன் மூலம் நம்மிடம் இருந்து அவர்களும், அவர்களிடம் இருந்து நாமும் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடியும்.
இப்போது நான், அரவிந்தராஜ் இயக்கத்தில், பரம்பொருள் என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறேன். ஒரு காவல் துறை அதிகாரிக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் போட்டியே இந்த படத்தின் மூலக்கதை. ருத்ரன் படத்தில் ராகவா லாரன்சுக்கு வில்லனாக நடிக்கிறேன். நான் ஏன் வில்லன் ஆனேன்? என்பதை சுற்றிதான் கதை அமைந்துள்ளது. பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறேன்.
விஜய்யின் 66-வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறேன். விக்னேஷ் ராஜ் இயக்கத்தில் போர் தொழில் படத்தில் துப்பறியும் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறேன்.
என் 150-வது படமான ஸ்மைல் மேன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்த படத்தை நவீன் இயக்குகிறார். ஒரு சீரியல் கொலைகாரனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறேன்? என்பதுதான் கதை. திருமலை இயக்கத்தில், சமரன் படத்திலும், கடலை மையமாக எடுக்கப்படும் ஒரு படத்திலும், அமெரிக்க வாழ் இந்தியர் பாலாஜி இயக்கத்தில் டாக்சியில் நடக்கும் கதை ஒன்றிலும், சில தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடிக்க இருக்கிறேன்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.