

சென்னை,
நடிகர் வைபவ் நடித்துள்ள ‘மணிகண்டா’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘மாளிகைப்புரம்’ திரைப்படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர், தமிழில் நடிகர் வைபவ்வை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மணிகண்டா’. இப்படத்தின் டீசர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.
இப்படத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். மேலும், அரவிந்த் ஆகாஷ் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.
சபரிமலை ஐயப்ப பக்தி மற்றும் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் இப்படம் தயாராகியுள்ளது.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘மணிகண்டா’ திரைப்படம், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. டீசர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.