

சென்னை,
நடிகை அனிஷ்மா மற்றும் நடிகைர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள மொத ராத்திரி படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனிஷ்மா. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ‘பூவன்’ மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், சமீபத்தில் வெளியான தமிழ் படங்களான ‘சிறை’ மற்றும் ‘யூத்’ மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும்.
ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மொத ராத்திரி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
‘மொத ராத்திரி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையொட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், தற்போது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்த டிரெய்லர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.