'தி வெர்டிக்ட்' திரைப்பட விமர்சனம்

கிருஷ்ணா சங்கர் இயக்கிய 'தி வெர்டிக்ட்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
'தி வெர்டிக்ட்' திரைப்பட விமர்சனம்
Published on

சென்னை,

கொரோனா காலகட்டத்தில் நடக்கும் இந்த கதையில், அமெரிக்காவில் வசிக்கும் பெரும் செல்வந்தரான சுஹாசினி, ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் வாழ்ந்து வருகிறார். அவரை சுருதி ஹரிஹரன் உடனிருந்து கவனித்து வருகிறார். எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டு சுஹாசினி இறந்து போக, போலீசாரின் சந்தேக பார்வையில் சுருதி ஹரிஹரன் சிக்குகிறார். சந்தர்ப்பங்களும், சாட்சியங்களும் அவருக்கு எதிராக மாறிப்போக, வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது.

சுருதி ஹரிஹரனுக்கு ஆதரவாக வக்கீல் வரலட்சுமி சரத்குமார் களத்தில் இறங்குகிறார். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகிறது. சுருதி ஹரிஹரன் காப்பாற்றப்பட்டாரா? சுஹாசினி மரணத்திற்கு என்ன காரணம்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

'மாயா' என்ற கதாபாத்திரத்தில் துணிச்சலும், சாதுரியமும் கொண்ட வக்கீலாக வரலட்சுமி சரத்குமார் பளிச்சிடுகிறார். வழக்கில் இருக்கும் மர்மங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார். அனுபவ நடிப்பால் சுஹாசினி கவனம் ஈர்க்கிறார். அவரது முக அசைவுகளே வசனங்களை சொல்லாமல் சொல்கிறது.

கொலைப்பழிக்கு ஆளாகி தவிக்கும் கதாபாத்திரத்தில் சுருதி ஹரிஹரன் பரிதாபம் சம்பாதிக்கிறார். வரலட்சுமி ஜூனியராக வித்யுலேகா, பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்ட அனைவரது நடிப்பிலும் எதார்த்தம் தெரிகிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஆதித்யா ராவின் இசையும் படத்தை தாங்கி பிடிக்கின்றன.

யூகிக்க முடிந்த காட்சிகள் இருந்தாலும், பரபரப்பான திரைக்கதை அதை மறக்கடிக்கிறது. வெளிநாட்டு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை எப்படிப்பட்டது? என்பதை எடுத்துச் சொல்லி பரபரப்பான கதைக்களத்தில் படத்தை இயக்கி கவனிக்க வைக்கிறார், கிருஷ்ணா சங்கர்.

தி வெர்டிக்ட் - நியாயமான தீர்ப்பு.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com