ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப அனுமதி கேட்கும் தியேட்டர்கள்

ஒரு மாதத்துக்கு மேலாக புதிய படங்கள் நிறுத்தம் காரணமாக ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்ப அனுமதி கேட்டுள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப அனுமதி கேட்கும் தியேட்டர்கள்
Published on


பட அதிபர்கள் வேலை நிறுத்தம் தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக புதிய படங்களை திரையிட முடியாமல் தவிக்கின்றனர். பழைய படங்களை தூசி தட்டி வெளியிட்டாலும் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. பல தியேட்டர்களில் 10 பேர் 15 பேர் மட்டுமே வருவதால் காலை, இரவு காட்சிகளை ரத்து செய்கிறார்கள்.

சிலர் தியேட்டர்களை குத்தகை எடுத்து நடத்துவதாகவும் அவர்கள் பெரிய சிரமத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். சமரச பேச்சுக்கள் தோல்வி அடைந்துள்ளதால் விரைவில் போராட்டம் முடிவுக்கு வந்து சகஜ நிலைமை திரும்பும் என்ற நம்பிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் இழந்துள்ளனர்.

இதனால் ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்ப அவர்கள் முன்வந்துள்ளனர். வருகிற 7-ந்தேதி மும்பையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்சும் மும்பை இந்தியன்சும் மோதுகின்றன. 10-ந்தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர்கிங்சும் கொல்கத்தா நைட்ரைடர்சும் மோதுகின்றன. இதே ஸ்டேடியத்தில் வருகிற 20-ந்தேதி சென்னை சூப்பர் கிங்சுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் போட்டி நடக்கிறது.

அடுத்த மாதம் (மே) 27-ந்தேதி வரை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்பினால் நல்ல வருமானம் பார்க்க முடியும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு அசோக் நகரில் உள்ள உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் திரையரங்குகள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த மனுவில் உதயம் வளாக திரையரங்கில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை வருகிற ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை திரையிட அனுமதி தர வேண்டும். புதிய படங்கள் வராததால் அரசாங்கத்துக்கு ஜி.எஸ்.டி வசூல் இல்லை. ஆகையால் தாங்கள் அரசாங்கத்துக்கும் தியேட்டர்களுக்கும் வருமானம் கிடைக்க இந்த கிரிக்கெட் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டு உள்ளது.

தியேட்டர்களில் ஐ.பி.எல் கிரிகெட்டை ஒளிபரப்ப அனுமதி வழங்கலாமா? என்று போலீஸ் தரப்பில் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. போலீஸ் அனுமதி கிடைத்தால் சென்னையிலும் வெளியூர்களிலும் மேலும் பல தியேட்டர் அதிபர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டை தங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்புவார்கள் என்று திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com