

சென்னை
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் இந்திய பட உலகையே அதிர வைத்தது. நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதுகுறித்து மகளிர் ஆணையம் விசாரணையில் இறங்கி இருக்கிறது.
அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல் தன்னிடம் இருப்பதாக இன்னொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார். தமிழ் பட டைரக்டர் ஒருவர் மீதும் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். அவரது பெயரை வெளியிடவில்லை.
தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு தொடர்ந்து அவர்கள் மீது புகார் தெரிவித்து வருகிறார். நடிகர் நானியும் தன்னிடம் தவறாக நடந்ததாக கூறினார். இதனை மறுத்த அவர் ஸ்ரீரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் பெயரையும் இப்போது சர்ச்சையில் இழுத்து இருக்கிறார் ஸ்ரீரெட்டி.
ஸ்ரீ ரெட்டி தனது அடுத்த பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீ ரெட்டி கூறியதாவது:-
நடிகர்கள் பற்றி நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். இது தென்னிந்திய திரையுலகிற்கே அவமானம். சில முக்கிய நபர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். இதோடு முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். நியாயம் கிடைப்பதற்கான முயற்சி எடுக்க அவர்கள் முன்வரவில்லை.
சினிமா துறை மட்டுமல்ல, 90 சதவீத பெண்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். சினிமாத் துறையில், சின்ன சின்ன உடைகளை பெண்கள் அணிந்து நடிக்க வேண்டும் என்கிறார்கள். சினிமாவில் பெண்களை கவர்ச்சி பொருளாகவே ஆண்கள் பார்க்கிறார்கள். பாலியல் ஆதாயத்தில் மட்டுமே சிலர் கவனம் செலுத்துவது ஏன் என தெரியவில்லை. கதையில் கவனம் செலுத்தினால், படங்கள் நன்றாக ஓடும்.
கேள்வி - மேலும் யாருடைய பெயர்களையாவது வெளியிட நீங்கள் திட்டமிட்டிருக்கிறார்களா?
பதில்- ஆம், எனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள்.என கூறினார்.