

நடிகர் அஜித்குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஜி.வி.பிரகாஷ், “தற்போது அஜித்குமார் சாருடன் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில் பணியாற்றி வருகிறேன். இப்படத்தில் ஊக்கமளிக்கும் வகையிலும், உணர்வுப்பூர்வமாகவும் அமைந்துள்ள சிறப்பான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ‘கிளாடியேட்டர்ஸ்’ முற்றிலும் வித்தியாசமான திரைப்படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ், அதில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் இருப்பதாக கூறியுள்ளார்.
“டிரெய்லரில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று இருக்கிறது. டிரெய்லரை பார்த்தவுடன் அனைவரும் ‘வாவ்’ என ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த சர்ப்ரைஸ் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அஜித்குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தில் இடம்பெற்ற முக்கிய தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.