அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனு...கோர்ட்டு அதிரடி உத்தரவு

இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு எந்த தடையும் இல்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி பனையூர் பாபு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்திருக்கும் அனிருத், இசைநிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அந்த வலையில், 'ஹூக்கும்' என்ற இசை நிகழ்ச்சியை கடந்த மாதம் 26ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை லையில் அமைந்துள்ள திருவிடந்தை என்ற இடத்தில் நடத்துவதாக அறிவித்திருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி தரவில்லை. இதனால் நிகழ்ச்சியை ரத்து செய்த அனிருத், டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி வரும் 23ம் தேதியன்று (நாளை) கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் நடைபெறுவதாக அறிவித்தார்.
இதற்கிடையில், அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி முறையீடு செய்த இந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் அருனித் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அனிருத் இசை நிகழ்ச்சிக்கு எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இசை நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.






