வாழ்க்கையில் தோல்வியே கிடையாது - மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது.
வாழ்க்கையில் தோல்வியே கிடையாது - மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை
Published on: 

வாழ்க்கை எப்பவுமே உங்களை பெயில்னு சொல்றது கிடையாது. நீங்க எப்பவுமே வாழ்க்கைக்கிட்ட ‘இன்னொரு தடவை பண்ண போறேன், ஒன் மோர்’னு சொல்லுங்க என்று மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில் +2 முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டன.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வது குறித்து உதாரணத்துடன் ஊக்கமளித்து பேசினார்.

நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, “இன்று வந்திருக்கிற மாணவ - மாணவிகள் தங்களின் சாதனைகளைச் சொல்லி, ஒவ்வொரு முறையும் பரிசு வாங்கிப் போகும்போது, எவ்வளவு விஷயங்கள் தாண்டி வந்திருக்காங்க, எவ்வளவு விஷயங்கள் கடந்து வந்திருக்காங்க அப்படின்னு பிரம்மிப்பாகப் பார்க்கிறேன். அப்பாவோட வழிகாட்டுதல்தான் இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் இதை எடுத்துச் செல்ல முடிகிறது.

அகரம் அறக்கட்டளை பணி

அகரம் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. கிட்டத்தட்ட முதல் தலைமுறை மாணவர்கள், மாணவிகளோட குடும்பத்துல ஒரு 7,000 பேரை எங்களால் தொட முடிந்திருக்கிறது. இன்னும் பல விஷயங்கள் அகரம் மூலமாக நடந்துகொண்டேதான் இருக்கிறது. இப்ப அகரமை முன்னெடுத்துட்டு போற முன்னாள் மாணவர்கள் அத்தனை பேருக்கும் அந்த பார்வையைச் சரியா பார்த்துக்கிட்டது இவர்களை மாதிரி நிறைய வழிகாட்டிகள்தான்.

சினிமாவில் ‘ஒன் மோர்’

சினிமாவிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயத்தை உங்களுக்குச் சொல்லணும் பார்க்கிறேன். சினிமால ‘ரீடேக்ஸ்’ அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு காட்சி ஒரே ஷாட்ல முடியறது கிடையாது. சில டைம் அஞ்சு டேக், ஆறு டேக் ஆகும். ஷாட் நல்லா வரணும் அப்படிங்கிறதுக்காக 18, 30 வாட்டி கூட ‘ரீடேக்ஸ்’ போவோம். ஒவ்வொரு முறையும் அது தவறாகும்போது இயக்குநர் ‘நீ பெயில்’ அப்படின்னு சொல்ல மாட்டாரு. ‘ஒன் மோர்’ அப்படிம்பாரு. நான் இயக்குநரை வாழ்க்கையாகப் பார்க்கிறேன்.

மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை

வாழ்க்கை எப்பவுமே உங்களை பெயில்னு சொல்றது கிடையாது. நீங்க அப்படி நினைச்சுக்கலாம், ஆனா வாழ்க்கை அப்படி கிடையாது. நீங்க எப்பவுமே வாழ்க்கைக்கிட்ட ‘இன்னொரு தடவை பண்ண போறேன், ஒன் மோர்’னு சொல்லுங்க. ‘இன்னொரு தடவைப் பண்ண முடியும்’னு சொல்லுங்க. அது உங்களோட மார்க்கா இருக்கலாம், இல்லாட்டி காலேஜ்ல சேர்ற ஒரு சீட்டா இருக்கலாம், இல்லாட்டி நீங்க போற முதல் வேலையா இருக்கலாம். உங்களுக்கு திருப்தியா இல்லாட்டி அதுவே கடைசி கிடையாது. அதுவே முடிவும் கிடையாது. நீங்க சொல்ல வேண்டிய ஒரே விஷயம் ‘ஒன் மோர்’. இன்னொரு வாட்டி அதை சரி பண்ண முடியும், இன்னொரு வாட்டி இன்னொரு சான்ஸ் எடுத்துக்க முடியும், அதை இன்னும் மேம்படுத்த முடியும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com