

தேனி,
தமிழ் திரைப்பட உலகில் கிராமிய கதைகளை புதிய பரிமாணத்தில் கொண்டு வந்து தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை சுஹாசினி, பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாரதிராஜா போல யாரும் இல்லை. தமிழ் சினிமாவின் நிறத்தையும் குணத்தையும் மாற்றியவர் அவர். எதார்த்தமான சினிமாவை ரசிகர்களுக்கு வழங்கியவர் பாரதிராஜா. அவர் இல்லாமல் தமிழ் சினிமாவில் எதார்த்தம் என்றே இல்லை” என்று உருக்கமாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “என்னை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜாதான். அவர் என் குடும்பத்தில் ஒருவராக இருந்தார். என் கணவருக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்.
இன்று அவர் நம்முடன் இல்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு அவர் வழங்கிய பங்களிப்புகளை நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என்று கண்கலங்கியபடி கூறினார்.