

நட்சத்திர நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, நீண்ட காலமாக தனிமையில் இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமோருவை மணந்துள்ளார். இவர்களது திருமணம் கோவை ஈசா மையத்தில் உள்ள பைரவி கோவிலில் நடைபெற்றது.
இவர் தற்போது நந்தினி ரெட்டி இயக்கத்தில் மா இண்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தநிலையில் குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நடத்திய 'அட் ஹோம்' வரவேற்பு நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பு சமந்தாவுக்கு வழங்கப்பட்டதில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து சமந்தா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் கூறி இருப்பதாவது:-
சிறுவயதில் இருந்தே என்னை ஊக்குவிக்க யாரும் இல்லை. ஒரு நாள் நான் இந்த நிலையை அடைவேன் என்று சொல்லும் ஒரு உள் குரல் கூட எனக்கு இல்லை. அந்த நேரத்தில் இதுபோன்ற கனவுகள் மிகப் பெரியதாகத் தோன்றின. ஆனால் நான் தொடர்ந்து முன்னேறிச் சென்றேன். இந்த நாடு எனக்கு வாய்ப்பளித்தது. அதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.