திருப்பரங்குன்றம் விவகாரம்: விஜய் கருத்து கூறாதது ஏன்? நடிகை கஸ்தூரி கேள்வி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் கருத்து கூறாதது தவறு என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நேற்று பகல் 11 மணியளவில் பா.ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாசார பிரிவு செயலாளரும், நடிகையுமான கஸ்தூரி வந்தார். கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்த அவர், மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலுக்கு சென்றும் தரிசித்தார். மலை மேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான உள்ளூர் மக்களை அவர் சந்தித்து பேசி ஒவ்வொருவருக்கும் சால்வை அணிவித்தார்.
பின்னர் நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒருவர் உயிரை மாய்த்து இருக்கிறார். அதைக்கூட கொச்சையாக பிரசாரம் செய்கிறார்கள். தீபத்தூணை சர்வே கல் என கனிமொழி சொல்லி இருக்கிறார். தர்காவுக்கு வந்து நான் வழிபட தயார். எங்கள் தீபத்தூணுக்கு நீங்களும் வந்து விளக்கேற்றுங்கள். மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, இந்துக்களின் நம்பிக்கை, தீபத்தூண் எல்லாவற்றையும் அவமதிக்கிறீர்கள்.
திருமாவளவன் மேல் நான் ரொம்ப மரியாதை வைத்திருந்தேன். அவர் சேராத இடம் சேர்ந்து, மனசாட்சிக்கு விரோதமாக பேசுகிறார். முருகன் என்று பெயர் வைத்துள்ளனரா? கொண்டு வந்து காட்டுங்கள் என்று கேட்கிறாரே? என் மகனின் பெயர் கார்த்திகேயன்தான். கர்நாடகாவில் முருகன் இருக்கிறார்.
எத்தனை பேருக்கு அங்கு முருகன்னா என்று பெயர் இருக்கிறது தெரியுமா? முருகையா என்று பெயர் இருக்கும். எத்தனை பேரை நான் வந்து உங்களுக்கு காட்டணும். முருகன் என்று பெயர் இருக்கா? அடுத்தது குமரன் என்று பெயர் இருக்கா? என் கணவர் பெயர் குமார். அடுத்தது அலகு குத்துவீர்களா? மொட்டை அடிப்பீர்களா என இப்படி ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு நாம் பதிலே சொல்ல முடியாது சாமி. ஏன் என்றால் அவருக்கு (திருமாவளவன்) விஷயமும் தெரியவில்லை. நம்பிக்கையும் இல்லை.
நண்பர் விஜய் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுத்து இருக்கிறார். கார்த்திகை தீபத்திற்கு ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாம். தற்போது எம்.ஜி.ஆர். பெயரை சொல்லி அரசியல் செய்கிறார். முதல்-அமைச்சராக வேண்டும் எனும் கனவில் இருக்கிறார். இந்தநிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவர் கருத்து கூறாதது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.






