"இது எனக்கு மிகப்பெரிய பாக்கியம்" - நடிகை மமிதா பைஜு

சூர்யா, மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் வருகிற 14ந் தேதி வெளியாக உள்ளது.

"இது எனக்கு மிகப்பெரிய பாக்கியம்" - நடிகை மமிதா பைஜு
Published on

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் மமிதா பைஜு, தனது சிறு வயது நினைவு ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக கவனம் ஈர்த்து வருபவர் மமிதா பைஜு. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர், தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தீவிர புரமோஷனில் படக்குழு

படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழுவினர் தீவிரமாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கோவையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூர்யா, மமிதா பைஜு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சூர்யாவை பார்க்க முடியாமல் அழுதேன்!

இந்த நிகழ்ச்சியில் பேசிய மமிதா பைஜு, தனது சிறு வயது நினைவு ஒன்றை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “நான் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் அண்ணன் 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் என் அண்ணனும், அவரது நண்பர்களும் தனியார் மாலிற்கு வந்த சூர்யா சாரை சென்று பார்த்தார்கள். ஆனால் என்னால் செல்ல முடியவில்லை. நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அங்கு செல்வது அவ்வளவு சுலபமாக இல்லை. அதனால் அம்மா, அப்பா என்னை அனுப்பவில்லை. நான் அழுதுகொண்டிருந்தேன். என் அண்ணன் சூர்யா சாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என்னிடம் காண்பித்தார். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது” என்றார்.

இன்று சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு!

மேலும், “ஆனால் இன்று அதே திருவனந்தபுரத்தில் உள்ள மாலில் சூர்யா சாருடன், அவருடைய படத்தில் நடித்து வந்து நிற்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய பாக்கியம்” என்று மமிதா பைஜு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com