“இது மிகவும் மோசமான போக்கு”- 'ஜன நாயகன்' தணிக்கை குறித்து பா.ரஞ்சித் பதிவு


“இது மிகவும் மோசமான போக்கு”- ஜன நாயகன் தணிக்கை குறித்து பா.ரஞ்சித் பதிவு
x
தினத்தந்தி 10 Jan 2026 7:49 AM IST (Updated: 10 Jan 2026 11:54 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகைக்கு 'ஜன நாயகன்' என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சென்னை,

'ஜனநாயகன்', 'பராசக்தி' படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், பராசக்தி படத்தில் 25 இடங்களில் வசனங்களை மியூட் செய்து, காட்சிகளை கட் செய்த பிறகே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் இன்று வெளியாக உள்ளது.

ஆனால், ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. நேற்று இதற்கான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கு 21-ம் தேதிக்கு தள்ளிப்போனது. பொங்கலுக்காவது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு தள்ளிப்போனதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்பட தணிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய தணிக்கைத்துறையை விமர்சித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story