சினிமாவில் என்னுடைய முதல் வெற்றி இதுதான் - சவுந்தர்யா ரஜினிகாந்த்

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா நடித்துள்ள ‘வித் லவ்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சினிமாவில் என்னுடைய முதல் வெற்றி இதுதான் - சவுந்தர்யா ரஜினிகாந்த்
Published on

சென்னை,

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ படம் கடந்த 6ந் தேதி வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்திடமும் படக்குழு பாராட்டு பெற்றது. இப்படம் மூன்று நாட்களில் ரூ.11 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், “ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பா எங்க படத்த தூக்கி வச்சுட்டாரு. போயஸ் கார்டன்ல இருக்குற வீட்டுக்கு நான் போனேன். அப்போ அம்மாவும் அப்பாவும் என்னை கட்டிப்பிடிச்சு சிரிச்சாங்க. அப்ப நான் அப்பாவை பார்த்து கேட்டேன், இதுதான் வெற்றியான்னு. நான் சினிமாவுல 18 வருஷமா இருக்கேன். ஆனா இப்பதான் முதல் வெற்றியை பார்க்குறேன். இந்தப் படம் என்னுடைய முதல் வெற்றி. அனஸ்வரா நடிப்பை பார்த்து இவ்வளவு நாள் எங்க இருந்தீங்கன்னு அப்பா கேட்டாரு. இயக்குநர் மதனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படத்துடைய வெற்றி எங்களுக்கு ஒரு பொறுப்பு. நல்ல படங்கள் கொடுக்கதான் நான் சினிமாவில் இருக்கேன். எல்லாருக்குமே நன்றி. அபிஷன், மதன் அறிமுகப்படுத்தின மாதிரி நிறைய இளம் திறமையாளர்களை நாங்க அறிமுகப்படுத்துவோம்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com