'இது நம் குடும்பத்தின் 10-வது தேசிய விருது!' – ஜி.வி. பிரகாஷை பெருமையுடன் வாழ்த்திய ஏ.ஆர். ரஹ்மான்

'அமரன்' திரைப்படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
'இது நம் குடும்பத்தின் 10-வது தேசிய விருது!' – ஜி.வி. பிரகாஷை பெருமையுடன் வாழ்த்திய ஏ.ஆர். ரஹ்மான்
Published on

சென்னை,

இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 1954-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்றுமாலை அறிவிக்கப்பட்டன. இதில், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அமரன்' திரைப்படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

ஜி.வி. பிரகாஷுக்கு 3-வது தேசிய விருது

'அமரன்' திரைப்படத்தின் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றுள்ளார். இது அவரது திரைப்பயணத்தில் கிடைக்கும் மூன்றாவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு. 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக 68-வது தேசிய விருதில் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும், 'வாத்தி' திரைப்படத்திற்காக 71-வது தேசிய விருதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் ஜி.வி. பிரகாஷ் வென்றிருந்தார். தற்போது 'அமரன்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தேசிய விருதை வென்றுள்ள ஜி.வி. பிரகாஷுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

10-வது தேசிய விருது

ஜிவி பிரகாஷ் தேசிய விருது வென்றதற்கு அவரது தாய்மாமா ஏஆர் ரஹ்மான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- "மூன்றாவது தேசிய விருது வென்றதற்கு வாழ்த்துகள். நமக்குக் கிடைத்துள்ள 10-வது தேசிய விருதை நம் குடும்பம் பெருமையுடன் கொண்டாடுகிறது.

இசை மீதான உன்னுடைய பேரார்வம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு தொடர்ந்து ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது. வரும் காலங்களில் நீ இன்னும் பல சாதனைகளை செய்ய வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக ஏஆர் ரஹ்மான் மொத்தமாக 7 முறை தேசிய விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com