இந்த படம்தான் என் வாழ்க்கையை மாற்றியது!... நடிகர் யாஷ் பேட்டி

நடிகர் யாஷ் தற்போது 'ராமாயணா' திரைப்படத்தில் ராவணனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த படம்தான் என் வாழ்க்கையை மாற்றியது!... நடிகர் யாஷ் பேட்டி
Published on: 

நான் 'பாய்ஸ்' திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் நடிகராக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அந்தப் படம்தான் என் வாழ்க்கையை மாற்றியது என நடிகர் யாஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் இருந்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தவர் யாஷ். 'கே.ஜி.எப்.' திரைப்படம் மூலம் நாடு முழுவதும் பிரபலமான இவர், தற்போது 'ராமாயணா' திரைப்படத்தில் ராவணனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிலையில், தான் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய திரைப்படம் குறித்தும், தனது திரைப்பயணத்தில் இயக்குநர் ஷங்கருக்கு உள்ள பங்கு குறித்தும் யாஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.

பான் இந்தியா நடிகராக உயர்த்திய 'கே.ஜி.எப்.'

கன்னட திரையுலகை இந்திய சினிமா மட்டுமின்றி உலக அளவிலும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் 'கே.ஜி.எப்.'. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் யாஷ் ஏற்றிருந்த 'ராக்கி பாய்' கதாபாத்திரம் அவரை பான் இந்தியா நட்சத்திரமாக உயர்த்தியது. இதன் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவர் உருவெடுத்தார்.

'பாய்ஸ்' திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம்

தான் நடிகராக வேண்டும் என்ற எண்ணம் உருவானதற்கு இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படமே முக்கியக் காரணம் என்று யாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் 'பாய்ஸ்' திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் நடிகராக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அந்தப் படம்தான் என் வாழ்க்கையை மாற்றியது. நான் ஒரு கதாநாயகனாக உருவாவதற்கு இயக்குநர் ஷங்கரும் ஒரு காரணம். இதை ஒரு நிகழ்ச்சியில் ஷங்கரிடமே நேரடியாகத் தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர் ஆச்சரியப்பட்டார்" என்று கூறியுள்ளார்.

'ராமாயணா' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு (2027) தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இதில் ராவணனாக யாஷ் மிரட்டல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

X