"தயாரிப்பாளர் கே.ராஜனின் தற்கொலைக்கு காரணம் இதுதான்.."- குடும்பத்தினர் பரபரப்பு தகவல்

எனது தந்தை கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொள்ளவில்லை என கே.ராஜனின் மகன் சுரேஷ்ராஜன் கூறியுள்ளார்.
"தயாரிப்பாளர் கே.ராஜனின் தற்கொலைக்கு காரணம் இதுதான்.."- குடும்பத்தினர் பரபரப்பு தகவல்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குனரும், வினியோகஸ்தர்கள் சங்க தலைவருமான கே.ராஜன், சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது இறப்புக்கான காரணம் குறித்து மகன் சுரேஷ்ராஜன் கூறியதாவது:-

அவர் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொள்ளவில்லை. தமிழ் திரையுலகில் பலருக்கும் கடன் கொடுத்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடன் தொகையை வசூலிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். அந்தவகையில் என் தந்தை ரூ.20 கோடி அளவுக்கு சிறிய, பெரிய தயாரிப்பாளர்களுக்கு கடன் கொடுத்திருக்கிறார். பலரும் அவரை ஏமாற்றி இருக்கிறார்கள்.

இதன் காரணமாகவே குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாகவே எனது தந்தை மன உளைச்சலில் இருந்தார். அதனாலேயே அவரது உடல்நலனும் வெகுவாக பாதிக்கப்பட்டது. 3 முறை மாரடைப்பு வந்திருக்கிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சமீபத்தில் கூட அவருக்கு 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டது. அந்த சூழலிலும், 'கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தர மறுக்கிறார்களே...' என்று வேதனை தெரிவித்தார். இந்த வேதனைதான் அவரை தற்கொலை செய்ய தூண்டியுள்ளது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். எனது தந்தை யார், யாருக்கு கடன் கொடுத்துள்ளார்? என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அதனை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் தெரிவித்து, பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

கே.ராஜனின் மகள் ராஜேஸ்வரி கூறும்போது, 'என் தந்தையின் வாழ்க்கையையும், அவரது வளர்ச்சியையும் புத்தகமாகவே எழுதலாம். ஏழையாக பிறந்தாலும், கனவுகளுடன் சினிமாவில் நுழைந்து, சாதித்து உச்சம் பெற்றார். வீரனாக வாழ்ந்தார்.அவரை யாரும் தாழ்த்தி பேச வேண்டாம். ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படிப்பட்டது? என்பது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com