ரஜினியின் வழுக்கைக்கு இதுதான் காரணம் - ராஜ்பகதூர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

நடத்துனராக இருந்த காலத்திலேயே ரஜினி மிகவும் ஸ்டைலிஷாக இருப்பார் என ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினி பஸ் கண்டக்டராக இருந்த காலத்தில் இருந்து இன்று வரை அவருக்கு நெருங்கிய நண்பராக இருப்பவர் ராஜ்பகதூர். இருவரும் ஒன்றாக வேலை செய்தனர். ரஜினி பற்றி ராஜ்பகதூர் அளித்த பேட்டியில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் வருமாறு:-
நானும் ரஜினியும் டிரைவர் மற்றும் கண்டக்டராக பணிபுரிந்தோம். எங்கள் நட்பு 53 ஆண்டுகளாக தொடர்கிறது. எவ்வளவு பெரிய நட்சத்திரமாக ரஜினி இருந்தாலும் அப்போது போல்தான் இப்போதும் பேசுகிறார். எங்கள் உடல்கள் மட்டும் வேறு ஆனால் எங்கள் ஆன்மாக்கள் ஒன்றுதான். நாங்கள் அடிக்கடி சினிமா பார்க்க செல்வோம். அப்போது அவரிடம் இருந்த சினிமா ஆர்வத்தை பார்த்து சினிமாவுக்கு முயற்சி செய்ய சொன்னேன். எனக்கு யார் வாய்ப்பு தருவார்கள் என்று கேட்டார். உன் திறமை உனக்கு தெரியாது. உன் கண்களில் ஒரு சக்தி இருக்கிறது என சொன்னேன்.
நடத்துனராக இருந்த காலத்திலேயே ரஜினி மிகவும் ஸ்டைலிஷாக இருந்தார். அவர் ஸ்டைலாக டிக்கெட் வழங்குவார். முக்கியமாக தனது சிகை அலங்காரத்தை ஒரு போதும் கெடுத்துக் கொள்ள மாட்டார். பேருந்தில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் டிக்கெட்டுகள் வழங்குவார். தலைமுடியை சீவிக் கொண்டே இருப்பார்.
சிக்னலில் பஸ் நின்றால் இறங்கி ஸ்டைலாக நின்று சிகரெட் பிடிப்பார். தனது தலைமுடியை அதிகமாக சீவினார். அதனால் அனைத்தும் உதிர்ந்தது. இதுதான் அவரது வழுக்கைக்கு காரணம். தலைமுடியை ஸ்டைல் செய்து, செய்து முடியை உதிர்த்து விட்டார்" இவ்வாறு ராஜ்பகதூர் கூறினார்.






