'இதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை' - கோவை சரளா

எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கோவை சரளா கூறினார்.
'இதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை' - கோவை சரளா
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. தற்போது இவர் தன்னைப்பற்றி பரவும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நான் அரசியலுக்கு வர இருப்பதாக தகவல் பரவி உள்ளது. நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன். திருமணமும் செய்து கொள்ள மாட்டேன்.

நாம் பிறக்கும்போது தனியாக பிறக்கிறோம். இறக்கும்போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்று எனக்கு தோன்றுகிறது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பல பெற்றோர்கள் அவர்களை குழந்தைகள் பார்த்துக் கொள்ளாத காரணத்தால் தனியாகவே வாழ்க்கையை கழிக்கிறார்கள். எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை.

இதுவரை 900 படங்களில் நடித்து இருக்கிறேன். 15 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை. அவர் படங்களை பார்த்துத்தான் நடிகையாக ஆசைப்பட்டேன்.

சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உறவினர்கள் வீட்டை விட்டு விரட்டியதால் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் வதந்திகள் பரவின. அதில் உண்மை இல்லை. சகோதரிகள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. வீட்டில் போர் அடித்தால் கோவில்களுக்கு செல்வேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com