

சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வருகிற 27ந் தேதி (நாளை) தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
"ஹேப்பி ராஜ்"
மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "ஹேப்பி ராஜ்". இதில் நாயகனாக ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
"சாத்தான்: தி டார்க்"
"சாத்தான்: தி டார்க்" உளவியல் திகில் திரைப்படமாகும். இதனை மணிகண்டன் ராமலிங்கம் இயக்கியுள்ளார். இதில் பிரெட்ரிக் ஜான், அயரா பலக், சந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலத்தில் நடக்கும் அமானுஷ்ய கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
"தே வில் கில் யூ"
கிரில் சோகோலோவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திகில்-நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படம் "தே வில் கில் யூ". இப்படத்தில் ஜாஸி பீட்ஸ், டாம் பெல்டன் மற்றும் பத்ரிசியா அர்குவெட் ஆகியோர் நடித்துள்ளனர். இது ஒரு நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிக்கொள்ளும் வீட்டுப் பணியாளரைப் பற்றிய கதை.
"நீ பாரெவர்"
அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் "நீ பாரெவர்". ஜென் ஜி இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் சுதர்ஷன் கோவிந்த் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மிஸ் சவுத் இந்தியா அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
"காணாத சுடர்"
ஜனகன் ஏ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "காணாத சுடர்". இதில் தனலட்சுமி, கதிரவாசன், ஷிரிஷா, தட்சணி ஆகியோர் நடித்துள்ளனர். வி. அண்ணாமலை, டி. ஆறுமுகம், ஏ. பகவதி இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.