'தக் லைப்' பட விவகாரம் : தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 13-ந் தேதி ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் 'தக் லைப்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, 'தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தினர்.
அதனை தொடர்ந்து, கமல்ஹாசன் மன்னிப்பு கோரினால் மட்டுமே கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை திரையிடுவோம் என்று கன்னட சினிமா வர்த்தக சபை கூறியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் 'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால், அந்த தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம், தீவைத்து எரிப்போம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.
அதனால், கர்நாடகாவில் தக் லைப் படத்தை திரையிடும் போது தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் கமல்ஹாசன் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் ரிலீஸை ஒத்தி வைக்கிறோம். ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு வரும் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன்படி, இந்த வழக்கின் விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் வந்த நிலையில், மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 13-ந் தேதி ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேற்கூறிய பிரச்சினையால் தக் லைப் படம் கர்நாடகாவில் மட்டும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.