தக் லைப் பட விவகாரம்: கர்நாடக ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனு மீது இன்று விசாரணை


தக் லைப் பட விவகாரம்:  கர்நாடக ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனு மீது இன்று விசாரணை
x
தினத்தந்தி 3 Jun 2025 6:33 AM IST (Updated: 9 Jun 2025 11:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 'தக் லைப்' திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.

பெங்களூரு,

நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம், நாளை மறுநாள் (5-ந்தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையொட்டி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, 'தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், 'தக் லைப்' படம் வருகிற 5-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் கர்நாடகத்தில் அதை திரையிட மாட்டோம் என்று கன்னட சினிமா வர்த்தக சபை கூறியுள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கோரினால் மட்டுமே அந்தப் படத்தை கர்நாடகத்தில் திரையிடுவோம் என்றும் கன்னட சினிமா வர்த்தக சபை கூறியுள்ளது. ஆனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் 'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால், அந்த தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம், தீவைத்து எரிப்போம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் கர்நாடகத்தில் அவரது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வருகிற 5-ந் தேதி வெளியாகும் 'தக் லைப்' படத்தை தடுக்கக்கூடாது என்று கர்நாடக அரசு, போலீஸ் துறை மற்றும் கன்னட சினிமா வர்த்தக சபைக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த சினிமா வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸ் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் ராஜேந்திரபாபு கூறுகையில், "கமல்ஹாசன் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இதுகுறித்து இயக்குனர் மணிரத்னத்திடம் நான் பேசினேன். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் உயர்ந்த நிலைக்கு தான் செல்வார். அவர் மரியாதை குறைந்துவிடாது. கன்னடத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் கர்நாடகத்தில் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். கமல்ஹாசனின் கருத்தை நடிகர் சிவராஜ்குமார் பலமாக எதிர்க்க வேண்டும்" என்றார்.

1 More update

Next Story