

சென்னை,
தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகளால் கவனம் பெற்றவர் இயக்குநர் மிஷ்கின். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட இவர், தனது வித்தியாசமான திரைப்பட அணுகுமுறையால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நவம்பர் 20-ம் தேதி வெளியான 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படத்தில் மிஷ்கின் 'மார்க்கண்டேயன்' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், தனது முந்தைய திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாவது குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "துப்பறிவாளன் 2 முதல் 5-ம் பாகங்கள் வரையிலான கதைக் கருக்கள் என்னிடம் உள்ளன. ஆனால், விஷாலுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன். இனி அதைத் தொடரும் எண்ணம் இல்லை.
'ட்ரெயின்' திரைப்படத்தின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இரண்டாம் பாகம் உருவாக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதை எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
'அஞ்சாதே' திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது. இன்றைய தலைமுறையினர் அந்தப் படத்துடன் எந்த அளவுக்குத் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை" என்றார்.
மேலும், "தற்போது பல திரைப்படங்களுக்கு இரண்டாம் பாகங்கள் உருவாகின்றன. சில படங்களின் வெற்றியைப் பயன்படுத்தி அதன் இரண்டாம் பாகத்தையும் வெற்றிபெறச் செய்யலாம் என்ற நோக்கம் இருப்பதாக நினைக்கிறேன். அப்படி ஒரு விஷயத்தை நான் செய்ய விரும்பவில்லை. ஒரு கதையை எழுதி முடித்த பிறகு, அது 'அஞ்சாதே' படத்தின் அடுத்தகட்டமாக இருந்தால் மட்டுமே 'அஞ்சாதே 2' என்று பெயரிடுவேன். இல்லையென்றால் வேறு தலைப்பை வைப்பேன். நான் நேர்மையாக ஒரு படைப்பை உருவாக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
மிஷ்கினின் இந்தப் பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.