

சென்னை,
சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுமம் வாயிலாக ‘சென்னை ஒன்’ என்ற செயலி புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி மெட்ரோ ரெயில், மின்சார ரெயில், மாநகர பஸ்களில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை கியூஆர் குறியீடு வழியாக பெறலாம். மாநகர பஸ்களில் எளிதாக டிக்கெட் எடுத்து பயணிக்க முடியும் என்பதால் சென்னைவாசிகள் மத்தியில் இந்த செயலி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சென்னை ஒன் செயலியை பயன்படுத்தி வெளியூர் பஸ்களுக்கும் டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறதாம்.
அதாவது, அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் பஸ்களில் பயணிக்க டிக்கெட் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக புதிய மென்பொருளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பேருந்துகளுக்கும் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி கொண்டு வந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.