திருச்சிற்றம்பலம் திரைப்படம்: பிரகாஷ் ராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சென்னை,
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது‘
இந்தநிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்றுடன் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பற்றி பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அதாவது, "அழகான தருணங்களின் மூன்று வருட திருச்சிற்றம்பலம் நினைவுகள்.. அரவணைப்பு.. பிணைப்பு நேற்று போல் உணர்கிறது. தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா சார்,மித்ரன் ஜவஹர், சன்பிக்சர்ஸ், முழு படக்குழு மற்றும் அன்பை பொழிந்த அன்பான பார்வையாளர்கள் அனைவரும் நன்றி" என்று அதில் பதிவிட்டுள்ளார்.






