பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா? எதிர்க்கும் இசைக்கலைஞர்கள்

டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை பேசியதால், அவருக்கு விருது வழங்குவதை கண்டித்து, இசைக்கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா? எதிர்க்கும் இசைக்கலைஞர்கள்
Published on

இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதையொட்டி, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, இந்தாண்டு நடக்க உள்ள 98வது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டை டி.எம் கிருஷ்ணா தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டது.

இசை கலைஞர் டி.எம் கிருஷ்ணா தலைமையில் இந்தாண்டு மாநாடு நடைபெறுவதால் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள், சமூக வலைதளத்தில், தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது.

"மியூசிக் அகாடமியின் மாநாடு 2024 பங்கேற்பதில் இருந்தும், டிசம்பர் 25ம் தேதி அன்று நடைபெற இருந்த கச்சேரியை வழங்குவதில் இருந்தும் விலகுகிறோம். இந்த மாநாடு டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெற இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சான்றோர்களை அவமதித்துள்ளார்.

அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் உள்ளது. மேலும் அவர் ஆன்மிகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.பல ஆண்டுகளாக கர்நாடக இசையை தங்கள் வாழ்க்கை என நினைத்து வாழும் இசைக் கலைஞர்களின் கடின உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் அவரது செயல்கள் உள்ளன. ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.

பெரியார் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உரக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர். கலை மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், நமது கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பு சமூகத்தை நாங்கள் நம்புகிறோம்.

இவற்றை புறக்கணித்து இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டால், அது நாங்கள் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும்" என குறிப்பிட்டுள்ளனர். ரஞ்சனி, காயத்ரியின் இந்த முடிவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com