அன்று பப்... இன்று ரிசார்ட்...மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

படங்களை விட சர்ச்சைகளில் சிக்கியதன் மூலமாகமே நடிகை கல்பிகா அதிகமாக பிரபலமானார்.
சென்னை,
ரெசார்ட் மேலாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டி , மெனு கார்டை வீசி, அறை சாவியை முகத்தில் அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பிரபல தெலுங்கு நடிகை கல்பிகா கனேஷ்.
35 வயதான கல்பிகா கனேஷ் ஐதராபாத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'பிரயாணம்' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 'ஆரஞ்சு', 'ஜூலாய்'. 'சீதம்மா வகிட்லோ ஸ்ரீரிமல்லே சீட்டு, 'படி படி லெச்சே மனசு'. 'ஹிட்: தி பர்ஸ்ட் கேஸ்', 'யசோதா' உள்ளிட்ட பிரபலமான படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக அவர் 2023 ஆம் ஆண்டு வெளியான 'அதர்வா' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். படங்களைத் தவிர, கல்பிகா கணேஷ் 'எக்கடிகி ஈ பருகு' மற்றும் 'லூசர்' என்ற ஜீ5 வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் விட சர்ச்சைகளில் சிக்கியதன் மூலமாகமே கல்பிகா அதிகமாக பிரபலமானார். சமீபத்தில் நடிகை கல்பிகா தனது நண்பருடன் பிறந்தநாளை கொண்டாட ஐதராபாத்தில் உள்ள ஒரு பப்பிற்குச் சென்றிருந்தபோது, பப் ஊழியர்களுக்கும் நடிகைக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது நடிகை, பப் ஊழியர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், ஓட்டல் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியானது.
இதனையடுத்து பப் ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் கல்பிகா மீது போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது தொர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் கல்பிகா. ஐதராபாத் அருகில் உள்ள மொய்னாபாத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டுக்கு மதியம் 3 மணியளவில் காரில் தனியாக வந்துள்ளார் நடிகை கல்பிகா. அப்போது ரிசெப்ஷனின் மேலாளருடன் நடிகை கல்பிகாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மேலாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்த கல்பிகா, மெனு கார்டை வீசி, அறை சாவியை முகத்தில் அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் இது குறித்து ஒரு விளக்க வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ''ரெசார்ட்டில் செல்போனுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ஒரு கேப் புக் செய்ய வைபை கேட்டேன், ஆனால், அதற்கு மேலாளர் ஒத்துழைக்காமல் பேசினார். மேலும் ஒரு சிகரெட் கேட்டேன், அதனால் தகராறு உருவாகியது. அவர் என் பேச்சை கேட்காமல் வாக்குவாதத்தில் இறங்கினார். அதனால்தான் கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியதானது'' என்று கல்பிகா விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து எந்த புகாரும் பதிவாகாது குறிப்பிடத்தக்கது.






