

சென்னை,
சமூக வலைதளங்களில் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாவது ஒன்றும் புதியதல்ல. ஆனால், சமீபத்தில் மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை அஞ்சு குரியன் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ, இணையவாசிகளின் புருவங்களை உயர்த்த செய்துள்ளது.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான 'நேரம்' (2013) படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அதன் பிறகு நஸ்ரியாவுடன் 'ஓம் சாந்தி ஓசானா', மற்றும் மெகா ஹிட் படமான 'பிரேமம்' ஆகியவற்றில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழில் 'சென்னை டு சிங்கப்பூர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், தெலுங்கிலும் 'இடம் ஜகத்' படத்தின் மூலம் தடம் பதித்தார்.
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அஞ்சு குரியன், சமீபத்தில் விடுமுறையைக் கழிக்க இந்தோனேசியாவின் பாலி (Bali) தீவுகளுக்குச் சென்றார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட ஜப்பானிய வகை ஸ்பா மசாஜ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் காட்டிய மசாஜ் பில் தான் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. அந்த மசாஜுக்காக 7.25 லட்சம் செலவானதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"7.25 லட்சமா?" என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அஞ்சு குரியன் ஒரு சுவாரசியமான விளக்கத்தையும் அளித்துள்ளார். அவர் குறிப்பிட்ட 7.25 லட்சம் என்பது இந்தோனேசிய ரூபியா (Indonesian Rupiah) கணக்காகும். இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.4,000 மட்டுமே.
"பாலியில் 7.25 லட்சம் என்பது இந்திய மதிப்பில் வெறும் 4 ஆயிரம் தான்" என்று அவர் ஜாலியாகப் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.