மலையாள திரையுலகில் சோகம் - தேசிய விருது பெற்ற நடிகர் சலீம் குமார் காலமானார்

சலீம் குமாரின் மறைவு மலையாளத் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
மலையாள திரையுலகில் சோகம் - தேசிய விருது பெற்ற நடிகர் சலீம் குமார் காலமானார்
Published on

கொச்சி,

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும், தேசிய விருது பெற்ற கலைஞருமான சலீம் குமார்(56) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு மலையாள திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழப்பு

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சலீம் குமார், தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்லீரல் நோயால் நீண்டகால போராட்டம்

கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த சலீம் குமார், முன்னதாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். அவரது உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

மிமிக்ரி கலைஞராக தொடங்கிய பயணம்

கேரள மாநிலத்தின் பரவூரில் பிறந்த சலீம் குமார், மிமிக்ரி கலைஞராக தனது கலைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் 1997-ம் ஆண்டு வெளியான ’இஷ்டமானு நூறு வட்டம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன்பிறகு நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மலையாள சினிமாவின் தனித்துவமான கலைஞராக உயர்ந்தார்.

தேசிய விருது வென்ற நடிகர்

2010-ஆம் ஆண்டு வெளியான ’ஆடமின்டே மகன் அபு’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்புக்காக தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருதை சலீம் குமார் வென்றார். மேலும் பல முறை கேரள மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

இயக்குநராகவும் சாதனை

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தடம் பதித்த சலீம் குமார், கருத்த யூதன் திரைப்படத்தின் கதைக்காக கேரள மாநில அரசின் சிறந்த கதைக்கான விருதைப் பெற்றார்.

தமிழிலும் அறிமுகமான முகம்

மலையாளத்தை தாண்டி தமிழிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவர், நேரம், நெடுஞ்சாலை, மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஈடுசெய்ய முடியாத இழப்பு

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சலீம் குமார், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். அவரது மறைவு மலையாளத் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com