அமெரிக்காவில் வெளியான 'திருக்குறள்-2' பட முன்னோட்டம்

'திருக்குறள்-2' படத்தின் 4 நிமிட மாதிரி காட்சி, அமெரிக்காவில் தமிழ் சங்க பேரவை நடத்திய விழாவில் சிறப்பு திரையிடலாக வெளியிடப்பட்டது.

அமெரிக்காவில் வெளியான 'திருக்குறள்-2' பட முன்னோட்டம்
Published on

திருவள்ளுவரின் வாழ்க்கையையும், அவர் உலகுக்கு வழங்கிய அறநெறி கருத்துகளையும் மையமாகக் கொண்டு இயக்குநர் ஏ.ஜே. பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான 'திருக்குறள்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 'திருக்குறள்-2' திரைப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த திரைப்படத்தின் ஆங்கில பதிப்பு 'ஒன்ஸ் அபான் அ டைம் இன் இந்துஸ்தான்' ( 'Once Upon a Time in Hindustan') என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த கலைச்சோழன் மீண்டும் திருவள்ளுவராகவும், தனலட்சுமி வாசுகியாகவும் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை எட்வின் சகாய் மேற்கொள்கிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் திரையிடப்பட்ட 4 நிமிட முன்னோட்டம்

'திருக்குறள்-2' படத்தின் ஆங்கில பதிப்பான 'Once Upon a Time in Hindustan' திரைப்படத்தின் 4 நிமிட மாதிரி காட்சி, அமெரிக்காவில் தமிழ் சங்க பேரவை நடத்திய விழாவில் சிறப்பு திரையிடலாக வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றிருந்த திருக்குறளின் அறம் சார்ந்த காட்சிகள், அங்கு கலந்து கொண்ட அமெரிக்கத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தன.

'அறம் ஒருபோதும் மாறாது' - இயக்குநர் பாலகிருஷ்ணன்

முன்னோட்டக் காட்சியை பார்த்த சிலர், "இன்றைய நவீன காலகட்டத்தில் திருக்குறள் வலியுறுத்தும் அறநெறிகள் நடைமுறையில் சாத்தியமா?" என்ற கேள்வியை இயக்குநர் ஏ.ஜே. பாலகிருஷ்ணனிடம் முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த அவர், "காலம் மாறலாம், நாகரிகம் மாறலாம், மனிதர்களின் செயல்களும் எண்ணங்களும் மாறலாம். ஆனால் அறம் என்பது காலத்தால் மாற்ற முடியாத ஒன்று. அது எந்தக் காலத்திலும் நிலைத்திருக்கும் வாழ்க்கை நெறியாகவே இருக்கும்" என்று தெரிவித்தார். இந்த பதில் விழாவில் கலந்து கொண்டவர்களின் பாராட்டைப் பெற்றதுடன், 'திருக்குறள்-2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com