

சென்னை,
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார்-2’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு 8.15 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்தார் 2’. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
‘சர்தார் 2’ படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து ‘சர்தார் 2’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்தது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், “சர்தார் 2 ” படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் டிரேட் சென்டரில் இன்று (ஆகஸ்ட் 31) மாலை 6:30 மணிக்கு நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இணையத்தில் டிரெய்லர் எப்போது வெளியாகும் என படக்ழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 08.15 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிரெய்லரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.