ரெயிலில் தொங்கியபடி பயணம்... திகில் அனுபவங்களை பகிர்ந்த உச்ச நடிகர்

ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த தனது திகில் அனுபவங்களை பற்றி பிரபல உச்ச நடிகர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ரெயிலில் தொங்கியபடி பயணம்... திகில் அனுபவங்களை பகிர்ந்த உச்ச நடிகர்
Published on

புதுடெல்லி,

இந்தி திரையுலகின் நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் அமிதாப் பச்சன். இளம் வயதில், நாயகனாக களம் கண்ட இவர், பிற்காலத்தில் குணசித்ர வேடங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால், இவருக்கு பல தரப்பட்ட ரசிகர்களின் வட்டம் விரிவடைந்தது.

கோன் பனேகா குரோர்பதி 14 என்ற குயிஸ் நிகழ்ச்சியானது கடந்த 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், நிறைய பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அமிதாப் பச்சன் கேள்விகள் கேட்டு வழிநடத்துகிறார்.

இதில், ஐஸ்வர்யா ரூபாரெல் என்ற 27 வயது இளம்பெண் பங்கேற்கிறார். மருத்துவரான அவர், மும்பை பயணிகள் ரெயிலில் பயணம் செய்த தனது இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர், நடிகர் அமிதாப் பச்சனை நோக்கி, மும்பை பயணிகள் ரெயிலில் பயணித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? என கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், நிறைய முறை பயணித்திருக்கிறேன். எனது வாழ்வின் தொடக்கத்தில், திரை துறையில் பெரிய ஆளாக முயற்சித்து கொண்டிருந்தபோது, நாங்கள் பயணிகள் ரெயிலிலேயே பயணம் செய்வோம். நீங்கள் கூறியதுபோல், ரெயிலில் உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கிடைக்கும்.

அந்த அனுபவம் எனக்கும் உண்டு. ரெயில்களில் இடம் கிடைப்பதே கடினம். பல முறை ரெயிலில் தொங்கியபடியே நான் பயணம் செய்துள்ளேன். உண்மையில் அது ஆபத்து நிறைந்தது என கூறியுள்ளார்.

ரெயிலில் ஏதேனும் வாங்கி இருக்கிறீர்களா? என ஐஸ்வர்யா கேட்டதற்கு, சாப்பிடுவதற்கு கூட அப்போது எங்களிடம் பணம் கிடையாது என அமிதாப் பச்சன் பதில் கூறியுள்ளார். ஐஸ்வர்யா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி இன்றும், நாளையும் இரவு 9 மணியளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com