

'மன சங்கர வரபிரசாத் காரு' படத்தை இயக்கிய அனில் ரவிபுடி, அடுத்ததாக நடிகர்கள் வெங்கடேஷ் டக்குபாட்டி மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் இணையும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். வணிக அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இதில், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் தொடக்க பூஜை அண்மையில் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், படப்பூஜை விழாவில் கலந்து கொண்ட மூத்த இயக்குநர் ராகவேந்திர ராவ் தொடர்பான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டியின் கைகளைப் பிடித்து அவர் இழுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் காணொளியை பகிர்ந்து வரும் சிலர், நடிகைகளின் அனுமதியின்றி உடல் ரீதியாகத் தொடுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், கடந்த காலத்தில் நடிகை நிஹாரிகா கொணிடேலாவுடன் அவர் நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்ட சம்பவங்களையும் குறிப்பிட்டு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனினும், இந்த விவகாரம் குறித்து ராகவேந்திர ராவோ அல்லது படக்குழுவினரோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளியை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துகள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.