

பத்தனம்திட்டா,
மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘அதிமனோகரம்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் சபரிமலை பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘அதிமனோகரம்’. தருண் மூர்த்தி இயக்கும் இப்படத்தில் மோகன்லால், ஐயப்ப பக்தி மிகுந்த காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் சில காட்சிகளை சபரிமலையில் படமாக்குவதற்கு தேவசம் போர்டு சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இது பக்தர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சபரிமலை கோவில் வளாகத்தில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதிப்பது கோவிலின் புனிதத்தன்மையை பாதிக்கக்கூடும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், படப்பிடிப்பு குழுவில் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதால், கோவிலின் கட்டுப்பாடுகள் மற்றும் புனிதத்தை அனைவரும் முறையாக கடைப்பிடிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து கேரள தேவசம் போர்டு அமைச்சர் கே.முரளிதரன் திட்டவட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, சபரிமலையில் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த பொதுவாக அனுமதி வழங்க முடியாது என்றும், சபரிமலை கோவில் அல்லது ஐயப்பனை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் ஆன்மிகப் படங்களுக்கு மட்டும் குறிப்பிட்ட சூழ்நிலையில் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரண திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக சபரிமலை கோவிலை வழங்க முடியாது என்றும், இதுவே அரசின் கொள்கை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.