

மும்பை,
அதிக லாபம் தருவதாகக்கூறி டி.வி. நடிகர் ஆயுஷ் ஷாவிடம் ரூ.4½ கோடி மோசடி செய்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியில் வெளியான 'மகாபாரதம்', 'உத்தரன்' உள்ளிட்ட பிரபல டி.வி. தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஆயுஷ் ஷா (வயது 31). மும்பையில் வசித்து வரும் இவருக்கு, கடந்த 2019-ம் ஆண்டு சமூக வலைதளம் மூலமாக பிஸ்வஜித் கோஷ் என்பவரது அறிமுகம் கிடைத்தது.
அப்போது பிஸ்வஜித் கோஷ், விமானப் போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் துறை சார்ந்த தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய நடிகர் ஆயுஷ் ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு தவணைகளாக அந்த நிறுவனத்தில் ரூ.4 கோடியே 44 லட்சத்து 48 ஆயிரத்தை முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் சிறிய அளவில் லாபத்தொகையை கொடுத்து அவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தினர்.
இந்தநிலையில், கடந்த 2024-ம் ஆண்டு ஆயுஷ் ஷா தனது முதலீட்டு பணத்தை திருப்பி கேட்ட போது, பணத்தை கொடுக்காமல் நிர்வாகிகள் இழுத்தடித்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆயுஷ் ஷா, இதுகுறித்து மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில், மும்பை ஓஷிவாரா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டதாக நிறுவனத்தின் இயக்குனர் பிஸ்வஜித் கோஷ், பியாலி சாட்டர்ஜி, பிஜோயா தாஸ், ஷபாப் உசேன் மற்றும் பாதல்சந்திர கோஷ் ஆகிய 5 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.