ருக்மணி வசந்த் அளித்த புகாரில் திருப்பம்... 3 பேரை கைது செய்த போலீசார்

ருக்மணி வசந்த் அளித்த புகார் பேரில் சைபர் கிரைம் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
ருக்மணி வசந்த் அளித்த புகாரில் திருப்பம்... 3 பேரை கைது செய்த போலீசார்
Published on

கன்னட திரையுலகில் அறிமுகமான நடிகை ருக்மணி வசந்த், குறுகிய காலத்திலேயே தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார். ரிஷப் செட்டியுடன் நடித்த 'காந்தாரா சேப்டர் 1' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற அவர், ரசிகர்களால் 'நேஷனல் கிரஷ்' என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது நடிகர் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ருக்மணி வசந்த், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக 'டிராகன்' படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தமிழிலும் இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.ஐ. மூலம் பரவிய போலி வீடியோ

சமீபத்தில், ருக்மணி வசந்த் பிகினி உடையில் இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அந்தக் காட்சிகள் உண்மையானவை அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், அந்த போலி வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் ருக்மணி வசந்த் புகார் அளித்திருந்தார்.

3 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்

இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய பெங்களூரு சைபர் கிரைம் போலீசார், ருக்மணி வசந்தின் போலி வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பரப்பியதாகக் கூறப்படும் மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மூன்று செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்ததற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com