

சென்னை,
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகள் நிரம்பி வழிகின்றன.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விஜய் ரசிகர்கள் #மாஸ்டர் என்ற ஹேஷ்டேக்குடன் டுவீட் செய்து வருகின்றனர். இதனால் இது தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வந்துள்ளது. இதன் விளைவாக, 2021-ம் ஆண்டில் அதிகம் டுவீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளில் இந்தியத் திரைப்பட வரிசையில் மாஸ்டர் ஹேஷ்டேக் இடம்பிடித்து உள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் கோவிட் 19 என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. மேலும் 8-வது இடத்தில் மாஸ்டர் திரைப்படம் உள்ளது.
மேலும் டுவிட்டரில் நடிகர் விஜய்யின் திரைப்பட ஹேஷ்டேக் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக சிறந்த டிரெண்டிங் ஹேஷ்டேக்கில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
'மெர்சல்', 'சர்கார்' மற்றும் 'பிகில்' ஆகிய திரைப்படங்கள் இதற்கு முன் டிரெண்டிங் ஹேஷ்டேக் சாதனை படைத்திருந்தன. 2020 மற்றும் 2021-இம் ஆண்டுகளின் டுவிட்டர் டிரெண்டிங்கில் 'மாஸ்டர்' திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.
மேலும் டுவிட்டர் வெளியிட்டுள்ள அதிகம் டுவிட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களின் வரிசையில் முதல் மற்றும் 3-ம் இடங்களை நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களும் 2-வது இடத்தில் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படமும் 4-வது இடத்தில் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும் இடம் பிடித்துள்ளன.