

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. 2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில், தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவினார். இத்தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) வேட்பாளர் பாபுவிடம், சுமார் 8700 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இந்த முடிவு அரசியல் விமர்சகர்கள் மற்றும் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின், தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், கொளத்தூரில் நடைபெற்ற தி.மு.க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகரும், திராவிட இயக்க ஆதரவாளருமான சத்யராஜ், மேடையில் கண்ணீர் விட்டு அழுது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கொளத்தூர் தொகுதி மக்களை பார்த்து கேள்வி எழுப்பிய சத்யராஜ், “கொளத்தூரில் இந்த நிகழ்ச்சி நடப்பதால் நான் கேட்கிறேன், நீங்க செய்தது நியாயமா? கொளத்தூரில் தலைவர் ஸ்டாலின் கண்டிப்பாக வென்றிருக்க வேண்டும். அவர் தோற்றதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் பொதுவாக எல்லா விஷயங்களையும் நகைச்சுவையாகவும், நக்கலாகவும் அணுகும் மனிதன். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால், தலைவரின் இந்தத் தோல்வியை மட்டும் என்னால் சாதாரணமாகக் கடந்து போக முடியவில்லை.
மேலும், உங்களுக்கெல்லாம் பட்டால்தான் புத்தி வரும், பட்டுத் திருந்துங்கள். அண்ணா, கலைஞர் கருணாநிதி வழியில் சிறந்த முதலமைச்சராக முன்மாதிரியாக இருந்தவர் ஸ்டாலின். தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கையில் ஏந்தி, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டுவந்த திராவிட மாடல் ஆட்சியைத் தோற்கடித்துவிட்டீர்கள். பட்டு அனுபவியுங்கள், அப்போதுதான் புத்தி வரும்.
சட்டசபையில் தற்போது எதிர்க்கட்சியில் நமது தம்பி உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத விஜய்யை கிழி கிழி என்று கிழிக்கிறார். நாளைக்கு நான் இந்த கேள்விகளை எல்லாம் கேட்கப் போறேன் என்று முதல் நாள் இரவே போன் செய்து உதயநிதி சொல்லி இருக்கக் கூடாதா? அப்படியாவது அவர் (விஜய்) ஏதாவது பதிலை தயார் செய்து கொண்டு வந்திருப்பார். திடீரென சட்டசபையில் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், டுவிட்டரில்தான் பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர் அமைதியாக இருக்க வேண்டிய சட்டசபையில் அமைதியாகவும், ஆக்ரோஷமாகப் பேச வேண்டிய மக்கள் மன்றத்தில் தேவையில்லாமல் ஆக்ரோஷமாகவும் பேசுகிறார்.முதல்-அமைச்சர் பேசும் பேச்சா இது? ” என்றார்.
சத்யராஜின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“திராவிட மாடல் அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட மாடல் அரசுக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் ஆதரவாளனாக இருந்தேன். இனிவரும் காலங்களிலும் அதேபோல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், என்னுடைய ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்று பெருமையோடும், மன உறுதியோடும், மன மகிழ்வோடும் மகிழ்ச்சியோடும் கூறிக்கொள்கிறேன்” என சமீபத்தில் பேசியிருந்தார்.