

எனது நடன நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வந்திருந்த ஜெமினி கணேசன். இந்த பெண் நன்றாக ஆடினார். எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வருவார் என்று வாழ்த்தினார். அது பலித்து விட்டது. ஒரு வருடத்திலேயே அவருடன் கற்பகம் படத்தில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் சாவித்திரி, ரங்காராவ் என்று பெரிய கலைஞர்கள் இருந்தனர். நான்தான் சின்ன பெண். ஆயிரம் இரவுகள் வருவதுண்டு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அழுத்தி தலை சீவி இருந்தேன். அப்போது ஜெமினி கணேசனும், சாவித்திரியும் இப்படி அழுத்தி சீவாம காதை மறைக்கிற மாதிரி சீவினால் நன்றாக இருக்கும் என்றனர். இப்போதுவரை அவர்கள் சொன்னமாதிரிதான் தலைவாருகிறேன். சரஸ்வதி சபதம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தது. நானும், ஜெமினி கணேசனும் போட்டி போட்டு நடித்தோம். இந்த படம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத முக்கியமான படம். குறத்தி மகன் படத்தில் ஜெமினி கணேசன் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் வந்தார். அவர் எல்லோருடனும் எப்போதுமே சிரிக்க சிரிக்க பேசுவார். கலகலப்பாக இருப்பார். அவருடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.