சிகரம் தொட்ட நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசை

தன் நீண்ட கால கனவு குறித்து தன் சமுக்க வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.
சிகரம் தொட்ட நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசை
Published on

சென்னை

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை நடிகராக தன்னுடைய ஆளுமையைக் நிலை நிறுத்தி வந்தவர் நடிகர் விவேக்.

தமிழ் திரைப்படத் துறையில் சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் விவேக். நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன். அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் சொல்லி வந்தார்.

சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் விவேக், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன்.

தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த விவேக் பிறகு அதே அமெரிக்கன் கல்லூரியில் வணிக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 5 தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க, அவருடைய இயக்கத்தில் உருவான மனதில் உறுதிவேண்டும் படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் சுஹாசினியின் சகோதரராக சிறிய வேடத்தில் நடித்த இவர் மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் படத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில், இவர் பேசிய இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, ஒரு வீடு இரு வாசல், புது மாப்பிள்ளை, கேளடி கண்மணி, இதய வாசல், புத்தம் புது பயணம் எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார்.

உனக்காக எல்லாம் உனக்காக, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, உன்னருகே நானிருந்தால், ஆசையில் ஓர் கடிதம், சந்தித்த வேளை, கந்தா கடம்பா கதிர்வேலா, பாளையத்து அம்மன், சீனு, லூட்டி, டும் டும் டும், விஸ்வநாதன் ராமமூர்த்தி, பூவெல்லாம் உன் வாசம், அள்ளித்தந்த வானம், மனதைத் திருடிவிட்டாய், தென்காசிப் பட்டணம், காதல் சடுகுடு, , விசில், தென்னவன், தூள், பாய்ஸ், திருமலை, பேரழகன், அந்நியன், சிவாஜி, பசுபதி மே/பா ராசக்காபாளையம், சண்டை, படிக்காதவன், பெருமாள், குரு என் ஆளு, ஐந்தாம் படை, தம்பிக்கு இந்த ஊரு, சிங்கம், பலே பாண்டியா, உத்தம புத்திரன், சீடன், மாப்பிள்ளை, வெடி போன்ற திரைப்படங்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.

அள்ளித் தந்த வானம், ஷாஜகான், யூத், ரன், பெண்ணின் மனதை தொட்டு, சாமி என பல படங்களில் விவேக்குக்கென தனியாக ஒரு நகைச்சுவைப் பகுதியே ஒதுக்கப்பட்டது. அது படங்களின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.

தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும் நடித்துள்ளார் விவேக், பஞ்ச் படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை. அதன் பிறகு சொல்லி அடிப்பேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

கதாநாயகனாக நான்தான் பாலா, பாலக்காட்டு மாதவன், வெள்ளைப் பூக்கள் போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் ஆரம்பகாலப் படங்களில் விவேக்கின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிலம்பரசன், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, கவுதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண் என சென்ற தலைமுறையிலிருந்து இந்தத் தலைமுறை நடிகர்களின் படங்கள் வரை நடித்து முத்திரை பதித்தவர் விவேக். கடந்த வருடம் வெளியான தாராளப் பிரபு திரைப்படத்தில் நாயகனுக்கு அடுத்து பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றிருந்தார் விவேக்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல் கலாமின் மிகப்பெரிய அபிமானியான விவேக், கலாம் பெயரில் க்ரீன் கலாம் என்கிற மரம் நடும் முன்னெடுப்பை, கலாமின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கினார்.

அனைத்து முன்னணி நடிகர்களுடனும் புதிய நடிகர்களுடனும் நடித்துவிட்ட விவேக்கிற்கு திரைத்துறைக்கு வந்த நாளிலிருந்தே கமலுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் எனும் ஆசை இருந்து வந்தது. ஷங்கர் இயக்கத்தில் கமலின் நடிப்பில் இந்தியன் 2 தொடங்கப்பட்டது. என்னுடைய நீண்டகாலக் கனவு உலகநாயகன் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது. அந்தக் கனவு இந்தியன் 2 வின் மூலமாக நனவாகப் போகிறது. அவருடன் இந்தப் படத்தில் நானும் நடிக்கிறேன் என்று தன் நீண்ட கால கனவு குறித்து தன் சமுக்க வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.

அதுபோல் அவர் திரைப்படங்களை இயக்கவும் திட்டமிட்டு இருந்தார் அதுவும் நிறைவேறவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com