விஷால் நடிக்கவுள்ள 'இரும்புத்திரை 2' படத்தின் அப்டேட்

சைபர் கிரைம் குற்றங்களை மையப்படுத்தி 2018-ம் ஆண்டு வெளியான 'இரும்புத்திரை' படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
விஷால் நடிக்கவுள்ள 'இரும்புத்திரை 2' படத்தின் அப்டேட்
Published on: 

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். சமீபத்தில் இவரது நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி 2' படத்தில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தானே இயக்கி நடிப்பதாக அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த 2018-ம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'இரும்புத்திரை'. இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. கதாநாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜுனும் நடித்திருந்தனர். விறுவிறுப்பான திரைக்கதையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தற்போது சர்தார் 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னரே இரும்புத்திரை 2 படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com