‘வாத்தி’ ஒரு பரிசோதனை; ‘விஸ்வநாத் & சன்ஸ்’ முழு தமிழ் படம்! - இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு

சூர்யா சாருடன் ஒரு நேரடி தமிழ் படம் எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்று வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

‘வாத்தி’ ஒரு பரிசோதனை; ‘விஸ்வநாத் & சன்ஸ்’ முழு தமிழ் படம்! -  இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு
Published on

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி, தற்போது நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் 'விஷ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் பேசிய கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

'தொலி பிரேமா' முதல் 'லக்கி பாஸ்கர்' வரை

2018-ஆம் ஆண்டு வெளியான 'தொலி பிரேமா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கி அட்லூரி, தனது முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டார். தொடர்ந்து 'மிஸ்டர் மஜ்னு', 'ரங் தே' போன்ற படங்களை இயக்கிய அவர், 2023-ல் தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். 'வாத்தி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோதிலும், அதன்பிறகு துல்கர் சல்மானை வைத்து இயக்கிய 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, அவரது இயக்குநர் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

சூர்யாவுடன் 'விஷ்வநாத் & சன்ஸ்'

தற்போது சூர்யா நடிக்கும் 'விஷ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். குடும்ப உறவுகளையும், ஆக்ஷனையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'சூர்யாவுடன் நேரடி தமிழ் படம் எடுக்க வேண்டும்'

சமீபத்திய பேட்டியில் பேசிய வெங்கி அட்லூரி, "'வாத்தி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஆனால் 'விஷ்வநாத் & சன்ஸ்' தமிழில் மட்டுமே உருவாக்கப்பட்டு, பின்னர் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது. சூர்யா சாருடன் ஒரு நேரடி தமிழ் படம் எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த விருப்பம் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. 'வாத்தி' திரைப்படத்தின் மூலம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டோம். ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, தெலுங்கில் தனுஷ் சாரின் ரசிகர்கள் கணிசமாக அதிகரித்ததை நாங்கள் கவனித்தோம். அதுவும் இந்தப் படத்தை உருவாக்குவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com