தனுஷ்-வெற்றிமாறன் இன்றி உருவாகும் 'வடசென்னை 2'.. கதாநாயகன் இவரா?


தனுஷ்-வெற்றிமாறன் இன்றி உருவாகும் வடசென்னை 2.. கதாநாயகன் இவரா?
x

'வடசென்னை 2' படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

'பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசூரன்' உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் பலரின் கோரிக்கையாக உள்ளது.

இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை 2 திரைப்படத்தை எப்போது இயக்குவார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன், விரைவில் வடசென்னை 2 வரும் என அப்டேட் கொடுத்திருந்தார்.

இந்தநிலையில், வடசென்னை 2 படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வெற்றிமாறனுக்கு பதிலாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் இப்படத்தை இயக்க உள்ளதாகவும். மேலும் தனுஷுக்கு பதில் நடிகர் மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story