'வடக்குப்பட்டி ராமசாமி' விமர்சனம் - புது கெட்டப்பில் சிரிக்க வைத்தாரா சந்தானம்...?

சந்தானம் நீண்ட முடி, தாடி என புது கெட்டப்பிலும் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.
'வடக்குப்பட்டி ராமசாமி' விமர்சனம் - புது கெட்டப்பில் சிரிக்க வைத்தாரா சந்தானம்...?
Published on

கிராமத்தில் சட்டி, பானை செய்து பிழைப்பு நடத்தும் சந்தானம் மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றி பணம் சம்பாதிக்க தனது நிலத்தில் கோவில் கட்டுகிறார். அதில் வரும் காணிக்கையில் சுகபோகமாக வாழ ஆரம்பிக்கிறார்.

அந்த ஊருக்கு வரும் பேராசை பிடித்த தாசில்தார் கோவில் வருமானத்தை பெருக்க வழிசொல்லி பங்கும் கேட்கிறார். அதற்கு சந்தானம் உடன்பட மறுத்ததும் சதி செய்து கோவிலை மூடி விடுகிறார். கோவிலை மீண்டும் திறக்க சந்தானம் முயற்சிப்பதும் அது நடந்ததா என்பதும் மீதி கதை.

சந்தானம் நீண்ட முடி, தாடி என புது கெட்டப்பிலும் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்க்கும் டைமிங் காமெடியை மிஸ் பண்ணாமல் கொடுத்திருக்கிறார். மெட்ராஸ் ஐ நோயை பரப்புவது, ஊர் முக்கியஸ்தர்களின் அப்பாவித்தனத்தை மூலதனமாக்குவது, அரசு அதிகாரியை மதியால் வெல்வது என படம் முழுவதும் தனக்குரிய இடங்களில் எகிறி அடித்துள்ளார்.

நாயகி மேகா ஆகாஷ் அந்தக் காலத்து நடிகை போல் அசத்தலான கெட்டப்பில் வந்து மயக்குகிறார். அரசு அதிகாரியாக வரும் தமிழ் உருவத்தாலும், பார்வையாலும் வில்லத்தனத்தை சத்தமில்லாமல் செய்து சபாஷ் வாங்குகிறார். சிரிப்பு வில்லன்களாக வரும் ரவிமரியா, ஜான் விஜய் இருவரும் கல…கல…

நிழல்கள் ரவி, மாறன், சேஷு, நான் கடவுள் ராஜேந்திரன், ஐ.டி.அரசன், கூல் சுரேஷ் என படத்தில் வரும் அனைவரும் பண்ணும் குசும்புக்கு தியேட்டர் குலுங்கி சிரிக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர், ஜாக்குலின் ஆகியோரின் பங்களிப்பும் நன்று.

ஒளிப்பதிவாளர் தீபக், மலை, குளம், நீர் நிலை, அழகான கிராமம் என எழில் கொஞ்சும் இடங்களை தன் கேமரா கோணத்தால் மேலும் அழகாக்கி காட்டியுள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் கடும் உழைப்பு பாடலிலும், பின்னணி இசையிலும் பளிச்சிடுகிறது.

காதுல பூ சுத்துற கதையை நூறு சதவீதம் காமெடியாக கொடுக்க வேண்டும் என்ற முடிவோடு காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கும் முயற்சியில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. முதல் பாதியில் மின்னல் வேகத்தில் நகரும் திரைக்கதை, பின் பாதியில் பிரேக் போடுவது பலகீனம். லாஜிக் பார்க்காமல் படம் பார்ப்பவர்களை 'வடக்குப்பட்டி ராமசாமி' ரசிக்க வைப்பது நிச்சயம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com