

தனுஷின் 56வது படத்தின் படப்பிடிப்பு பூஜை நிகழ்ச்சியில் ரசிகர்கள் மாநாடு அளவுக்கு குவிந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததை வடிவேலு பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் தனுஷின் புதிய படமான ‘டி56’ படத்தின் பூஜை சிவகங்கை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 25) கோலாகலமாக நடைபெற்றது.
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, ‘டி56’ படத்தை இயக்குகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரடொக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் இன்று காலை படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன், வடிவேலு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் பங்கேற்ற நடிகர் தனுஷ், கருப்பணசாமிக்கு 18 அடி அரிவாள் காணிக்கையாக வழங்கினார்.
‘டி56’ படத்தின் பூஜை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். ஒரு மாநாடு போன்று ரசிகர்கள் குவிந்து தனுஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்வில் பேசிய தனுஷ், “இந்தப் பூஜை பின்னால இருக்கிற இந்த சாமியையும், முன்னால இருக்கிற ரசிகர்களாகிய உங்களையும் நம்பி இன்னைக்கு இங்க நடக்குது. நான் அதிகம் பேச விரும்பவில்லை. சீக்கரமா ‘ஓம்’ படத்தோட ஆடியோ வெளியீட்டு விழாவுல சந்திப்போம். இங்கே திரண்டு வந்து உங்களோட அன்பையும் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு, “எனக்கு நீண்ட நாளைக்கு பின்னால தனுஷுடன் இணைந்து நடிக்கிற வாய்ப்பு இந்தப் படத்துல கிடைச்சிருக்கு. ஏன் இடையில சரியா நடிக்கவில்லை. தனுஷ் கூட சேர்ந்து ஏன் நடிக்கவில்லை அப்படினு நீங்க கேட்கலாம்.
சிலர் சில விஷயங்களுக்காக தீக்கொழுத்தி போடுவாங்க. அதை பற்றவைக்கிறதுனு நம்ம ஊர்ல சொல்வாங்க. எங்க சினிமாவுல தீப்பந்தத்தையே போட்டு இரண்டு பேரை பிரிக்கும் வேலையைப் பார்ப்பாங்க. காலச்சூழல் எங்க இரண்டு பேரையும் மாற்றியது.
இன்னைக்கு நாங்க இங்க வந்து நிற்கக் கூடிய பாக்கியத்தை ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் மூலமா, உங்கள் சார்பாக இந்த மாரநாட்டு கருப்பன் கொடுத்துருக்கார். அவர் முன்னால இந்த பூஜை நடக்குது.
காரில் வரும்போதே எண்ண முடியாத அளவிற்கான கார்களை பார்த்தேன். திரைப்படத்தின் பூஜையே மாநாடு போல் இருக்கிறது. இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள் என நினைக்கவில்லை. மிரண்டுவிட்டேன். உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் தேவை” என தெரிவித்துள்ளார்.